திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாணவர் சதாம் ஹுசைன் என்ற மாணவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்தார். மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இவர் மொத்த மதிப்பெண்களான 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இது மாநிலத்தில் இரண்டாமிடமும், நெல்லை மாவட்ட அளவில் முதலாவது இடமுமாகும். பொதுத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாமிடம் பெறுவது மேலப்பாளையம் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
சாதனை மாணவர் சதாம் ஹுசைனின் தந்தை அப்துல் ரஹ்மான் கூலித் தொழிலாளியாகப் பணி புரிந்து வருகிறார். தாயார் சுலைகா பீவியும் கூலித் தொழிலாளி தான்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவரின் சாதனை அனைத்து தரப்பு மக்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது.
சாதனை புரிந்த மாணவர் சதாம் ஹுசைனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மற்றும் மேலப்பாளையம் நகரக் கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கினர்.
அவர்களிடம் தனது சாதனை குறித்து மாணவர் சதாம் ஹுசைன் கூறியதாவது:
குடும்பத்தின் வறுமையைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாகப் படித்து வந்தேன். தொலைக்காட்சி பார்ப்பதை அறவே தவிர்த்தேன். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து முடித்து விடுவேன். தேர்வுக்காக அதிக நேரம் உழைத்தேன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் நகர மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட தேர்வு வழிகாட்டி முகாமில் கலந்து கொண்டேன். அந்நிகழ்ச்சியில் இலவசமாக வழங்கப்பட்ட முக்கிய வினாக்களின் தொகுப்புப் புத்தகம் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 80 சதவிகிதம் அந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்ட கேள்விகள் என்பதால் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. எந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் என்ஜினியரிங்) படிப்பில் சேர்ந்து படித்து பொறியாளராக வேண்டும் என்பதே எனது லட்சியம்.
இவ்வாறு மாணவர் சதாம் ஹுசைன் தெரிவித்தார். அவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கினர்.
Thanks:www.tntj.net
No comments:
Post a Comment