கண்ணியமிக்க வல்லோன் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுப் படுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:26)
ஒருவருக்கு ஆட்சியை வழங்குவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.நாம் வாழும் இந்திய திருநாட்டிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து, தெர்ந்தெடுக்கக் கூடிய வசதியை வல்ல இறைவன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் நமக்கு வழங்கியுள்ளான். அதனடிப்படையில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய ஓட்டை ஆண்டாண்டு காலமாக சில குறிப்பிட்ட கட்சிகளுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்த்தோம்.
நமது தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த சட்டசபைத் தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி அல்லது தான் சார்ந்த கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என விரும்புவார்கள். மேலும், மற்ற சமுதாயத்தைப் பொருத்தவரையில் எல்லாக் கட்சிகளிலும் பரவலாக இருக்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதுநாள் வரையில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்குத்தான் ஆதரவு என்ற நிலைபாட்டில் உள்ளனர். யாரை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்குமோ அவர்கள் தான் அதிகமான இடங்களை பெற்றுனர் என்பதால் அனைவரின் பார்வையும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது தான் உள்ளது.
இதனை பயன்படுத்தி முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் தங்கள் பங்குக்கு அரசியல் கட்சிகளை அமைத்துக் கொண்டு, அதிமுக, திமுக என்று கூட்டணிகளை அமைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றன. இத்தகைய சமுதாயக் கட்சிகள் சமுதாயத்திற்கு நன்மைகள் செய்வதை விட தங்கள் இயக்கத்திற்கும், தங்களின் சுயலாபத்திற்காகவும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நலனை பாதுகாப்பதற்காகவும் தான்; தேர்தல் களம் காணுகின்றன என்றால் அது மிகையல்ல.
இத்தகைய முஸ்லீம் பெயர்தாங்கி கட்சிகளுக்கு மத்தியில், ஊழல் மலிந்து, அரசியலின் சூழ்ச்சிகள் நிரம்பிய நிலையில் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரங்களை செம்மைப்படுத்தாத சாக்கடை அரசியல் கட்சிகளுக்கிடையே நாங்கள் அவர்களோடு (சாக்கடைகளோடு) ஒட்டுறவாடி அரசியல் சாக்கடைகளை கழுவப் போகின்றோம் என்ற (போலி) தத்துவத்தை கையில் வைத்துக் கொண்டு முஸ்லீம்களின் ஒட்டுக்களை பெறத்துடியாய் துடிப்பவர்களில் முக்கியமானவர்கள் 1. மனிதநேய மக்கள் கட்சி. 2. சோஷலிஸ்ட் டெமாக்ரெட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிஐபி) ஆகும்.
இவர்களின் முஸ்லிம் சமுதாய நலன் எந்தளவுக்கு உள்ளது என்பதை பார்ப்போமேயானால், இவர்களை சமுதாய அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படவேண்டியவர்கள் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
மேலும் இவர்கள் தங்களை பரிசுத்தவான்களாக காண்பிப்பதற்காக ஏகத்துவவாதிகளாகவும் சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும் காட்டிக் கொள்வார்கள்.
ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரட்டியடித்ததில் முக்கிய பங்கு வகித்த முஸ்லீம் சமுதாயம் இருந்த உரிமைகளையும் இழந்து நிற்பதனால், அதை பெறுவதற்கு சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் சென்றால் தான் பெற முடியும். இதுவரையில் இருந்த முஸ்லீம் கட்சிகள் அதைச் செய்ய தவறி விட்டன. அதனால் நாங்கள் சென்று நாம் இழந்த உரிமைகளை திரும்ப பெற போராடுவோம் அதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள். எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்று தங்களின் பத்திரிகை வாயிலாகவும் மக்களிடம் செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி எங்கே தங்களின் சட்டமன்ற, பாராளுமன்ற ஆசை கனவாகி விடுமோ என்ற பயத்தில், வீதியில் இறங்கி போராடினாலும் உரிமைகளை மீட்க முடியாது எனப் பொய் பிரச்சாரம் செய்வார்கள். இத்தகைய பொய் பிரச்சாரங்களை நம்பி நாம் வாக்களிப்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக முஸ்லீம் சமுதாயத்திற்கு ஆகி விடும் என எச்சரிக்கின்றோம்.
ஏனெனில், இதயத்தில் மட்டும் இடம் வைத்திருந்தவரை 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க வைத்ததற்கும், ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுத்ததையே பொறுத்துக் கொள்ள இயலாதவரை இட ஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைக்க வைத்தது,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் முஸ்லீம் சமுதாய மக்கள் வீதியில் இறங்கிப் போராடியதால் தானே கிடைத்தது.
இக்கட்சிகளின் தேர்தல் நிலைப்பாடுகளை ஒவ்வொரு முஸ்லீம்களும் கூர்ந்து பார்ப்பார்களேயானால் அவர்களின் சுயநலம் அப்பட்டமாக தெரியும்.
கடந்த தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆதன் மூலம் வக்ப் போர்டு வாரியத் தலைவர் பதவியும் பெற்றனர். அதற்காக அவர்கள் கருணாநிதிக்கு சாமரம் வீசி நடந்துக் கொண்ட விதம் அனைவரின் முகத்தையும் சுளிக்க வைத்தது.
தேர்தல் சீட்டு பெற வேண்டுமென்பதற்காக மாநாடு நடத்தி, அந்த மாநாட்டிலே கருணாநிதி அவர்களை புகழ்ந்ததும், இட ஒதுக்கீட்டில் கருணாநிதி துரோகம் செய்த போதும் அதை ரோஸ்டர் முறை என்று நியாயப் படுத்தினர். ஆனால் தங்கள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காது என்றவுடன் வீராப்பு பேசி, தனியாக களம் கண்டு மண்ணை கவ்வினர்.
அன்று ஆதரித்த கருணாநிதியை எதிர்த்து, இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்து 3 தொகுதிகளை பெற்று, அதை பெருமையாக பேசுகின்றனர்.
அன்று திமுகவை ஆதரிக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் ஜெயலலிதாவை, மோடியின் தோழி என்றும், மோடிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்றும், மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்றும் வாய் கிழிய பேசினார்களே இப்போது அவ்வாறு பேசுவார்களா? அதைப்பற்றி விளக்குவார்களா?
மேலும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அதிமுகவை, முஸ்லீம்களின் இடஓதுக்கீட்டிற்கு ஆணையம் அமைத்ததற்காக ஆதரித்த நிலையில், அந்த ஆணையத்தை வெத்துப் பேப்பர் என்ற விமர்சித்தவர்கள் தான் இந்த மனித நேய மக்கள் கட்சியினர்.
அதுமட்டுமன்றி, பெண்கள் ஆட்சிக்கு வரலாமா? மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்துகிறார்கள் என்று, நாம் வாழக்கூடிய சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், திமுகவை ஆதரிக்க வேண்டும் என்கின்ற ஓரே நோக்கில் மக்களை மார்க்கத்தின் பெயரால் திசைதிருப்பி மண்ணை கவ்வியவர்கள், இன்று எந்த ஹதிஸின் அடிப்படையில் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதற்காக 3 தொகுதிகளை பெற்று ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை விளக்குவார்களா?
இரண்டாவதாக, எஸ்டிபிஐ என்கின்ற கட்சி இளைஞர்களை ஜிஹாதின்பெயரால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும், ஜனநாயகம் ஷிர்க் என்கின்ற போலி தத்துவங்களை பேசி வழிகெடுத்தவர்கள், தங்களின் தத்துவங்கள் மக்களிடம் செல்லுபடியாகவில்லை என்றதும் தங்களின் மூட்டை முடிச்சுகளை கட்டி வைத்து விட்டு, அரசியலில் குதித்துள்ளனர்.
கட்சியை ஆரம்பித்து விட்டு, மாநாட்டையும் நடத்தி விட்டு தங்களை யாரும் அழைக்க மாட்டார்களா? என புலம்புகின்றனர். எங்களை யாரும் அழைக்கவில்லை. எங்களை யாரும் மதிக்கவில்லை. திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர் என்றெல்லாம் புலம்புவதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
அப்படி யாராவது அழைக்கமாட்டார்களா? அதன் மூலமாவது தங்களின் எம்எல்ஏ ஆசை நனவாகாதா? என்பதற்காக 10 தொகுதிகள் போதும் என்று வீர வசனம் பேசுகின்றனர்.
மேலும், அதிகாரத்தை நமதாக்குவோம் என்ற முழக்கத்துடன் வந்திருக்கும் இவர்கள், தற்போதைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காக யார் 2 தொகுதிகள் தருகின்றார்களோ அவர்களோடு கூட்டு என்கின்ற நிலைக்கு வந்து விட்டனர்.
ஒரு வேளை இரண்டு கழகங்களும் கண்டு கொள்ளவில்லை என்றால் தனித்து நிற்கவும் செய்வார்கள். அப்படி தனித்து நின்றால் இவர்கள் போட்ட ஒற்றுமை கோஷம் போலியானது, குர்ஆன் மற்றும் ஹதிஸை மக்களிடம் எடுத்து சொல்லி மக்களை நல்வழிப்படுத்துகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பதற்காகத்தான் என்பது உண்மையாகிறது. ஆனால் இவர்களின் எண்ணம் இன்ஷாஅல்லாஹ் பலிக்காது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதற்காக 19 இயக்கங்களை திரட்டிய இவர்கள், உண்மையிலேயே சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும், மறுமைசிந்தனை மிக்கவர்களாகவும், தன்னலம் பாராமல் உழைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்களானால், இவர்களின் இயக்கங்களை கலைத்து விட்டு ஏற்கனவே உள்ள கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்திருக்க வேண்டும்.
மேலும், இவர்கள் இதற்கு முன்னால் இருந்தவர்களால் எதையும் சாதிக்க இயலவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சமுதாய அக்கறையில்லை. அதனால் தான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். விரும்பி வரவில்லை. நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் வந்துள்ளோம், மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் என்றெல்லாம் பசப்பு பேச்சுக்கள் பேசினாலும், இவர்கள் அவர்களை விட மோசமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்
சட்டசபை செல்வதற்கே முன்பே இந்தளவிற்கு பொய்யையும் புகட்டையும் சொல்கிறார்கள் என்றால், சட்டமன்றத்திற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ சென்றால் நம் சமுதாயத்தின் நிலை என்னவாகும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதேபோல், இவர்களின் அபிலாஷைகளை அடைவதற்காக எல்லாவிதமான வேடத்தையும் போட்டுக் கொள்வார்கள். தமிழகத்தில் தர்காவை ஆதரிப்பது, மௌலீதை ஆதரிப்பது அதற்காக வசூல் செய்வது, நடிகர்களின் பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்து போஸ்டாகள்; அடிப்பது, தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களை எதிர்ப்பதற்காக கொள்கையற்ற வர்களுடன் சேர்ந்துக் கொண்டு தவ்ஹீதை எதிர்ப்பது.
வளைகுடாவில் இவர்கள்; தங்களை எகத்துவ வாதிகள் போல் காட்டிக் கொள்வதும், ஏகத்தவ பிரச்சாரம் செய்வதும் இவர்களின் வாடிக்கை. இத்தகையவர்களை நம் முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்க தான் வேண்டுமா?
இதிலிருந்தே இவர்களின் கபட நாடகம், பதவி ஆசை வெட்டவெளிச்சமாக தெரிகின்றது. இவர்கள் எந்தளவிற்கு கேடு கெட்டவர்கள் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.
இப்படிப்பட்ட இவர்கள் ஒருகாலும் வெற்றி (பெற போவதில்லை இன்ஷாஅல்லாஹ்) பெற்றால், இவர்களால் நம் சமுதாயத்துக்கு கேடு தான் ஏற்படுமே தவிர நன்மை ஒன்றும் கிடைக்காது.
மேலும், தாய்சபை என்று முழங்கப்படுகின்ற முஸ்லீம் லீக் எப்போதும் போல் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு தாங்கள் எழுதிக் கொடுத்துள்ள அடிமை சாசனத்தை புதுப்பித்துக் கொண்டு, கேவலப்பட்டுள்ளனர். புதியதாக ஆரம்பிக்கப்பட்ட கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு திமுகவில் ஏழு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போதும் போல் மூன்றைக் கொடுத்து விட்டு நம் சமுதாயத்திற்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டார். இந்தளவிற்கு நம் சமுதாயத்தின் மானத்தை கேள்விக்குறியாக்கிய இத்தகைய பெயர் தாங்கி முஸ்லீம் கட்சிகளை வேரோடும்,வேரடி மண்ணோடும் வீழ்த்துவது தான் ஒவ்வொரு முஸ்லீமின் கடமையாக இருக்க வேண்டும்.
ஆகவே, சமுதாய சொந்தங்களே! இவர்களின் வசீகரப் பேச்சை நம்பி இவர்கள் சொல்லக்கூடிய கட்சிகளுக்கு ஒட்டுப் போடுவதை புறக்கணிப்பதன் மூலம் அடுத்த தேர்தலிலாவது இவர்களை திருந்த வைப்போம்.
மேலும், இன்ஷாஅல்லாஹ் என்றென்றும் சமுதாய மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நம் சமுதாயத்திற்கு யார் நன்மையை செய்கிறார்களோ அவர்களை நோக்கி கையை காண்பிக்கும். அத்தகையவர்களுக்கு நம்முடைய வாக்குகளை சிந்தாமல் அளித்து வெற்றி பெறச் செய்து இத்தகைய கேடுகெட்டவர்களை புறக்கணிப்போமாக!
No comments:
Post a Comment